தூத்துக்குடி, ஜன.31: தூத்துக்குடியில் விஜய் நடிக்கும் "சுறா' படப்பிடிப்பின்போது பொதுமக்களுக்கும், சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் கனல் கண்ணனை தாக்க முயன்றனர்.
நடிகர் விஜய் நடிக்கும் "சுறா' படப்பிடிப்பு தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி தெர்மல்நகர் கடற்கரைப் பகுதியில் கடலில் விழுந்த மீனவர் ஒருவரை கடலோர காவல் படையினர் காப்பாற்றுவது போன்றும், அதனை மாவட்ட ஆட்சியர் வந்து பார்வையிடுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
இந்த படப்பிடிப்பை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். அப்போது பொதுமக்களை விலகிச் செல்லுமாறு சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் வலியுறுத்தியுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாராம்.
இதைப் பார்த்த கனல் கண்ணன் அந்த நபரிடம் இருந்த செல்போனை பறித்து வீசினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கனல் கண்ணனை சுற்றி வளைத்து தாக்க முயன்றனராம். இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸôர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.