விமர்சனம்
ரவுடிகளை வேட்டையாடும் இளைஞன்
நடிப்பு: விஜய், அனுஷ்கா, சலிம் கவுஸ், ஸ்ரீஹரி, ரவிஷங்கர், சாய்ஜி ஷிண்டே, சத்யன், ஸ்ரீநாத். வெளியீடு: சன் பிக்சர்ஸ் இயக்கம்: பாபு சிவன் இசை: விஜய் ஆண்டனி.
தூத்துக்குடியின்
துறுதுறு இளைஞன் ரவிக்கு (விஜய்) ஐ.பி.எஸ் படித்து போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது லட்சியம். அதற்கு ஒரே காரணம் தேவராஜ் (ஸ்ரீஹரி). நேர்மையான போலீஸ் அதிகாரி. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். 60 அடி உயர கட்&அவுட் வைக்கும் அளவிற்கு அவர் மீது வெறி. போலீஸ் ரவியாக மாறும் அளவுக்கு போலீஸ் வேலை மீது அவ்வளவு பக்தி. தூத்துக்குடியில் அவர் எங்கிருந்தாலும் பிரச்னை அவரைத் தேடி வரும். இல்லாவிட்டால் பிரச்னை இருக்கும் இடத்தில் அவர் இருப்பார். தவறு செய்தால் போலீஸ்காரனையும் புரட்டியெடுப்பார். அவருக்கு இருக்கும் ஒரே மைனஸ் படிப்பு. ஒருவழியாக பிளஸ்&2 பாசானதை விழா எடுத்து கொண்டாடிவிட்டு தேவராஜ் மாதிரியே ஆக வேண்டும் என்பதற்காக, சென்னையில் அவர் படித்த கல்லூரியிலேயே சேர்கிறார். அவர் போலவே தன் படிப்புக்கு ஆகும் செலவை, ஆட்டோ ஓட்டி சம்பாதித்துக் கொள்கிறார்.
பார்க்கிற சொத்தையெல்லாம் விழுங்கும் வேதநாயகமும் (சலீம் கவுஸ்), பார்க்கிற பெண்களை எல்லாம் படுக்கைக்கு கொண்டுவரும் அவரது மகன் செல்லாவும் (ரவிஷங்கர்). சென்னை நகர தாதா சாம்ராஜ்யத்தின் மன்னனும், இளவரசனும். இவர்களது கைத்தடியாக போலீஸ் அதிகாரி கட்டபொம்மன் (ஷாயாஜி ஷிண்டே). இவர்களும், ரவியும் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள்.
ரவி, தன் படிப்புச் செலவுக்காக மாணிக்க விநாயகத்திடம் ஆட்டோ எடுத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவரது மகள் உமா (சஞ்சிதா படுகோனே) அவரின் கல்லூரித் தோழி. ஒரு சந்தர்ப்பத்தில் உமா, செல்லாவின் கண்களில் பட்டுவிட, அவளை விருந்தாக்க நினைக்கிறான். அவளை அழைத்துக் கொண்டு போகும் ரவி, செல்லாவை ஆஸ்பத்திரிக்கு அள்ளிப்போக வைக்கிறார். தாதா சாம்ராஜயத்தின் சக்ரவர்த்தி மகன் மீது கை வைத்தால் சும்மா இருக்குமா போலீஸ். ரவியை கைது செய்து லாக்கப்பில் கசக்கிப் பிழிந்து காயப்போடுகிறது. போலீசிடமிருந்து தப்புகிறார் ரவி. காக்கிசட்டைக்காரனாக வேண்டும் என்று வந்தவர் அடிபட்ட புலியாக வேட்டைக்காரனாகிறார். அப்புறம் ஆரம்பிக்கிறது அதிரடி சரவெடி வேட்டை.
வயதான முதியவர் மீது காரை ஏற்றிவிட்டு போலீஸ் டிரைவரை துரத்தி பிடித்து பாடம் கற்பிப்பதில் தொடங்குகிறது விஜய்யின் ஆக்ஷன் கலாட்டா. தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷனில், பாட்டியை ரயில் ஏற்ற வந்த அனுஷ்கா, தன்னோடு பயணம் செய்யப்போகிறார் என்று பேமிலி பிளானிங் வரை கற்பனை செய்துவிட்டு பின்பு அவள் பாட்டியுடன் பயணம் செய்வது முதல் தொடங்குகிறது விஜய்யின் காமெடி கலாட்டா. ஆக்ஷனுக்கு வில்லன்களும், காமெடிக்கு நண்பர்களும், காதலுக்கு அனுஷ்காவும் அழகாக கைகொடுக்கிறார்கள்.
அனுஷ்காவின் பாட்டியை கைக்குள் போட்டுக்கொண்டு அவர் வீட்டிற்குள்ளேயே விஜய் செய்யும் காதல் கலாட்டா சுவாரஸ்யம். பாடல்காட்சிகளில் அழகால் அள்ளுகிறார் அனுஷ்கா.
‘உங்கள மாதிரி ஆளுங்களுக்கு போலீஸ்காரன் பத்தாது... வேட்டைக்காரன்தான் வேணும்’ என்று விஜய் ஆடும் வேட்டை தியேட்டரில் தெறிக்கிறது. ‘சாமிகிட்டதான் சாந்தமா பேசுவேன். சாக்கடைகிட்ட இல்லே’ என்று பஞ்ச் அடிக்கும்போது ‘ஏ’ கிளாசிலிருந்து ‘சி’ கிளாஸ் வரை விசில் பறக்கிறது. ஜூனியர் விஜய்யின் என்டரியும், டான்சும் அழகான கவிதை.
நீண்ட தலைமுடி, கருத்த உதடு, கருவளைய கண்கள் என மனித மிருகமாக நடமாடியிருக்கிறார் ரவிஷங்கர். ‘வாடா...வாடா...’ என்று அவர் ஹீரோவை அழைக்கும் முரட்டு குரலில் நடுங்கிப்போகிறது திரை. உதடு சிரிக்க, உள்ளம் கடுக்க பேசி, அமைதி வில்லனாக பயமுறுத்துகிறார் சலீம் கவுஸ்.
தான் கல்யாணம் பண்ணி வைத்த நண்பன் சத்யன், தனக்காக சாகும்போதும், தான் உயர்வாக நினைத்த போலீஸ் அதிகாரியின் பரிதாப நிலையைக் கண்டு உருகும்போதும் விஜய்யின் சென்டிமென்ட் டச். தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி, அந்த போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு.
விவேகாவின் ‘ஒரு சின்னத் தாமரை...’ இளசுகளின் ரிங்டோன். கபிலனின் “கரிகாலன் காலப்போல...’ டூயட் கிக், ‘புலி உறுமுது...’, அண்ணாமலையின், ‘என் உச்சி மண்டையில...’ துள்ளாட்டம், “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலுமாசம் தூங்க மாட்ட’ விஜய் ஸ்பெஷல் என வெரைட்டி விருந்து வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. பின்ணணி இசையும் மிரட்டல்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சியில் வண்ணமாகயும், ஆக்ஷன் காட்சியில் வன்மமாயும் விளையாடியிருக்கிறது. கனல் கண்ணனின் அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்குகிறது. டாப் கீயரில் படத்தை கொண்டு செல்கிறார் எடிட்டர் வி.டி.விஜயன். இத்தனை திறமைசாலிகளையும் ஒருங்கிணைத்து கேப்டன் பணியை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குனர் பாபு சிவன்.