இயக்கத்தை தயார்படுத்திக் கொண்டு
கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்
சென்னை, ஏப்.9:
“இயக்கத்தை தயார்படுத்திவிட்டு, கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்” என்று நடிகர் விஜய் கூறினார்.
சித்திக் மலையாளத்தில் இயக்கிய படம், ‘பாடிகார்ட்’. திலீப், நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் & அசின் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங், காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உங்களது 50வது படம், ‘சுறா’ எப்போது ரிலீஸ் ஆகிறது?
இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகும்.
சித்திக் இயக்கத்தில் நடிப்பது பற்றி?
அவர் இயக்கத்தில் நான் நடித்த ‘பிரண்ட்ஸ்’ படம் பெரிய வெற்றி பெற்றது. அவர் சிறந்த இயக்குனர். அவருடன் மீண்டும் பணியாற்ற தற்போதுதான் நேரம் சரியாக அமைந்திருக்கிறது. அவருடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. அசின் என்னுடன் நடித்த ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்கள் ஹிட் ஆனது. இப்போது அவர் என்னுடன் நடிக்கும் படமும் பெரிய ஹிட் ஆகும்.
உங்கள் மக்கள் இயக்கம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?
மக்கள் இயக்கம் தொடங்கியதே ஏழைகளுக்கு நற்பணி செய்யத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய அவர்களுக்கு ஒரு அடையாள அட்டை தேவைப்பட்டது. கம்ப்யூட்டர்கள் வழங்குவது, ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இத்தகைய நற்பணிகளை விளம்பரபடுத்தவோ, வெளிச்சப்படுத்தவோ நான் விரும்பாததால் அது நாளுக்கு நாள் வேகத்தோடு நடந்து வருகிறது.
நீங்கள் அரசியலுக்கு வருவது தாமதமாகிறதே... உங்களை நம்பியுள்ள ரசிகர்களை ஏமாற்றி விடுவீர்கள் என்கிறார்களே?
நான் எந்த வேலையில் இறங்கினாலும் அதில் நூறு சதவிகிதம் முழுமையாக ஈடுபடுவேன். எல்லாவற்றுக்கும் காலமும் சூழலும் முக்கியம். அரசியல், ஆரவாரமான அலைகள் வீசும் பெருங்கடல். அதில் நீந்தி கரையேற வேண்டும் என்றால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். அதற்கான அரசியல் பாடம் பயின்று, என் இயக்கத்தினரையும் தயார்படுத்தி வருகிறேன்.
விஜய் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்பும்போது, கண்டிப்பாக களத்தில் இறங்குவேன். ‘நான் ஒரு முடிவெடுத்தா, அதை, நான் நினைச்சா கூட மாற்ற மாட்டேன்’ என்பது சினிமா வசனம் மட்டுமல்ல. நிஜமும் அப்படிதான்.
மக்கள் பிரச்னைகளுக்காக போராடவும் தயங்க மாட்டேன் என்று முன்பு சொன்னீர்களே?
அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னை உயரத்தில் உட்கார வைத்த மக்களுக்காக போராட, எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னை, சகோதரனாக, மாணவ சமூகத்தினர் சக மாணவனாக, பெரியோர், தாய்மார்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக, குடும்பத்தில் ஒருவனாக நேசிக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்னை என்றால் கண்டிப்பாக, களத்தில் இறங்கி போராடுவேன்.
என் உயிரினும் மேலான தமிழ் மக்களையும் என்னை நம்பி என் வழியை பின்பற்றும் ரசிகர்களையும் கை விடமாட்டேன்.
இவ்வாறு நடிகர் விஜய் கூறினார்.
பேட்டியின் போது விஜய்யின் செய்தி தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் உடனிருந்தார்.