Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி வசூலில் புதிய சாதனை



வேட்டைக்காரன் வரலாறு காணாத வெற்றி
வசூலில் புதிய சாதனை
சென்னை, டிச.19: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.
இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, “சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, “விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்” என்றார்.
விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, “கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை” என்றார்.


dinakaran article