Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன் வில்லன் ரவிசங்கர் பேட்டி


வில்லனுக்கு தில்லு முக்கியம் ...


நீண்ட தலைமுடி, சின்ன தாடி, கொடூரத்தை கக்கும் கண்கள், மிரட்டும் குரல் என ‘வேட்டைக்காரனி’ல் மிரட்டல் வில்லனாக அவதாரம் எடுத்திருப்பவர் ரவிசங்கர். நடிகர் சாய்குமாரின் சகோதரர். 2300 படங்களுக்கு டப்பிங் பேசியவர். ‘அருந்ததி’ படத்தில் கம்பீரமாக கேட்கும், ‘அடியே அருந்ததீ...’ குரல் இவருடையதுதான்.

“ஒரு படத்துக்கு டப்பிங் பேசிவிட்டு பிரசாத் லேப் முன்னால் நின்று கொண்டிருந்தேன். அப்போது பொழுதுபோகாமல் நீண்ட தலைமுடியும், தாடியும் வளர்த்திருந்தேன். அங்கு வந்த இயக்குனர் எனது தோற்றத்தை பார்த்து வந்து பேசினார். எனது படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா என்று கேட்டார். அப்போது எனக்குத் தெரியாது, நான் விஜய் படத்தின் வில்லன் என்று. பிறகு எனது போட்டோக்களை வாங்கிச் சென்று விஜய்யிடம் காண்பித்திருக்கிறார். அவரும் ஓ.கே சொல்ல, ‘வேட்டைக்காரன்’ என் வாழ்க்கையில் ஒளிஏற்றி வைத்திருக்கிறான்”
வேட்டைக்காரன் அனுபவம் எப்படி?
முதலில் நடிக்க ஆசையாக இருந்தேன். விஜய்யுடன் என்றபோது பயந்தேன். அவருக்கு நிறைய ரசிகர்கள், அவர் பட சண்டைக் காட்சிகளில் ஒருவித ஆக்ரோஷம் இருக்கும் என்று தெரியும். இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடித்தேன். அவருடன் மோதும் முதல் சண்டைக் காட்சியிலேயே நல்ல அனுபவம் கிடைத்தது. பெரிய ஹீரோக்களுடன் மோத ஆக்ரோஷமான குரல் இருந்தால் மட்டும்போதாது, தில்லும் வேண்டும் என்பதை உணர்ந்தேன். காரணம் அவர்கள் தங்கள் உடம்பை அதற்காக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே வில்லனும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து தினமும், ஜிம், யோகா என்று உடம்பை வலுவாக்கி வருகிறேன்.
இனி தொடர்ந்து வில்லன்தானா?
வேட்டைக்காரனில் மிருகத்தனமான வில்லனாக நடித்துள்ளேன். தொடர்ந்தும் வில்லனாக நடிப்பதிலேயே கவனம் செலுத்த இருக்கிறேன். வேட்டைக்காரனைத் தொடர்ந்து தெலுங்கு ‘பொல்லாதவன்‘ படத்தில் கிஷோர் நடித்த கேரக்டரிலும், மணிசர்மா தயாரிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். தமிழில் நிறைய படங்கள் வருகிறது. தேர்வு செய்து நடிப்பேன். வில்லன் என்று இல்லாமல் முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்களிலும் நடிப்பேன்.